தமிழக செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் வாழை மரங்கள்-மின்கம்பங்கள் சேதம்

மழை காரணமாக கலெக்டர் லட்சுமி பவ்யா கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

கனமழை

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாழைத்தோட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மரங்கள் சாய்ந்தது

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை இணைக்கும் கீழ்நாடுகாணி மலைச்சாலையில் சின்னுகுண்டரும்பு அருகே மரம் ஒன்று சாலையின் குறுக்கே அந்த வழியாக சென்ற சரக்கு லாரி மீது விழுந்தது. இதில் லாரி பலத்த சேதமடைந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் பல மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரானது.

அதேபோல், கூடலூர்-மைசூர் சாலையில் தொரப்பள்ளிபகுதியில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மரம் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததால் மின்கம்பங்களும் சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வினியோகம் வழங்கப்பட்டது.

நஷ்டம்

கரளைக்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றால் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து பெருமளவில் சேதமடைந்தன.அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தோட்டங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றும் கூடலூர், பந்தலூர் வட்டார பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் குடைபிடித்தவாறு நடந்து சென்றனர்.

விடுமுறை

தொடர்ந்து மழை காரணமாக கலெக்டர் லட்சுமி பவ்யா கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். மேலும் அங்கு கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணித்தனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் வயல்களுக்கு போதுமான நீர்வரத்து கிடைத்து வருவதால், நெல் சாகுபடிக்கான பணிகளை விரைவில் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT