தமிழக செய்திகள்

ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு இணைந்த புதிய திட்டம்- மத்திய அரசு விரைவில் அறிமுகம்

கடுமையான நோய்கள் மற்றும் பெரிய மருத்துவ சிகிச்சைகளின் செலவுகளை சமாளிக்க இந்த திட்டம் உதவும்.

ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு இணைந்த புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

வயது முதிர்ந்த காலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் நிம்மதியான வாழ்க்கையும், தடையற்ற மருத்துவ வசதியும் மிகவும் அத்தியாவசியம். பொதுவாக, ஓய்வூதியத் திட்டங்களும் மருத்துவக் காப்பீடுகளும் தனித்தனியாகவே இருக்கும் நிலையில், தற்போது இவை இரண்டையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

வயதான காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் கண்டு அஞ்சாமல், மக்கள் தங்களின் சேமிப்பைக் கொண்டே தரமான சிகிச்சையைப் பெற வழிவகை செய்யும் புதிய திட்டத்தை (என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன்) இன்னும் 70 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் எஸ்.ராமன் கூறும் போது,"இந்த திட்டம் ஒப்புதல் பெற்று, தற்போது அதனை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

இந்த புதிய திட்டத்தின்படி ஓய்வூதிய நிதி நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு வழங்கும். குறிப்பாக, ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகக்கூடிய கடுமையான நோய்கள் மற்றும் பெரிய மருத்துவ சிகிச்சைகளின் செலவுகளை சமாளிக்க இந்த திட்டம் உதவும்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ், முதலில் ஓய்வூதிய மருத்துவக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை நேரடியாக மருத்துவமனை அல்லது மருத்துவ சேவை வழங்குநருக்கு செலுத்தப்படும். அதன் பிறகு மீதமுள்ள செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கான மருத்துவ ஓய்வூதியக் கணக்கில் ரூ.3,000 முதல் ரூ.1 லட்சம் வரை பங்களிப்பு செய்ய முடியும்.