ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

நீட் ரத்து தீர்மானம்: தவெக Vs திமுக காரசார விவாதம்

நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தவெக மற்றும் தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், எந்த நுழைவுத்தேர்வும் இருக்க கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. சட்டப்போராட்டங்கள் எந்த அளவில் உள்ளது என்பதை தமிழக அரசு விளக்கம் வேண்டும். நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசியிருக்கிறார். மின்துறை அமைச்சர் பேசியது குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது என்றார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜாவின் இந்த பேச்சுக்கு த.வெ.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஆதர் அர்ஜூனா, நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை, இதில் மாணவர் நலனே முக்கியம். நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கம் தெரியும், ஆதாரம் உள்ளது என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், நீட் விவகாரத்தில் இங்கே பலனடைந்த ஒரு சில மாணவர்களை பற்றி பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார், பல ஆயிரம் மாணவர்களின் நிலை என்ன?. பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம். பாதிக்கப்படும் பல லட்சம் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே டெல்லி சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆதரவு தெரிவிக்கவில்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவிக்க, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய். அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய். ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். மேலும் பல முறை அறிவுறுத்திய பின்னரும் தி.மு.க. எம்எல்ஏ நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் பேசுகிறார் என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதற்கு, நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. நீட தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது, தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.