நீட் ரத்து தீர்மானம்- அதிமுக, திமுக, மஜக ஆதரவு

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.
நீட்
நீட்
Published on

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக, அதிமுக, மஜக ஆகிய கட்சிகள் ஆதரித்தனர்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

ஆதரவு

இந்த தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன் தீர்மானத்தின் மீது பேசுகையில்,

நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக தான் என்றார்.

அ.தி.மு.க.வை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய தமிமுன் அன்சாரி, நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது, நிரந்தர தீர்வு தேவை. பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தி.மு.க.வும் ஆதரவும் தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இந்தியாவிலேயே நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக தேர்வு பெற்றவன் நான். நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. எந்த நுழைவுத்தேர்வும் இருக்கக்கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com