ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக உணவு, தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி அருகே இருக்கும் மலை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. தோட்டத்தில் பயிரிட்டிருக்கும் மக்காச்சோளம், காய்கறிகள், வாழை, தென்னை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே வழக்கம்போல் வாகன போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது திடீரென அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது
யானை கூட்டம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். யானை கூட்டம் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையைக் கடந்து சென்றது. 10-க்கும் மேற்பட்ட யானைகளுடன் குட்டிகளும் கடந்து சென்றன. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.