தமிழக செய்திகள்

மூலனூர் அருகே ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பம்

பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடைக்கல்பாடி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து முறிந்த நிலையில் எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்கம்பம்

இந்த மின்கம்பம் பல நாட்களாகவே வலுவிழந்து காணப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் முறிந்து கம்பிகளின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாலை வழியாகத் தினமும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். பலத்த காற்று வீசும்போதோ அல்லது மின்கம்பிகள் மீது ஏதேனும் மோதினாலோ இந்த மின்கம்பம் சரிந்து விழுந்து, உயிரிழப்பு போன்ற பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

பலமுறை சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை உடனடியாக நிறுவ வேண்டும். பெரும் விபத்து நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே இதனைச் சரிசெய்ய வேண்டும்" எனத் தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

உயிர்ப்பலி ஏற்படும் முன்பாக, மாவட்ட நிர்வாகமும் மின்சார வாரியமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த மின்கம்பத்தைச் சீரமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.