தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 நாட்கள் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை 300 பேர்தேர்வு எழுதினர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு எழுத வந்த ஆசிரியர்கள் செல்போன், உணவு, பொருட்களை தேர்வு மையத்தின் வெளியே உள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றனர். தேர்வு முடிந்தவுடன் தங்களது உடமைகளை எடுக்க வந்தனர். அப்போது ஆசிரியர்களின் அனைத்துப் பொருட்களும் அறை முழுவதும் சிதறி கிடந்தன. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சில ஆசிரியர்களின் செல்போன் முற்றிலும் உடைக்கப்பட்டும் சில ஆசிரியர்களின் செல்போன் அங்கு காணாமல் போனதும் கண்டு வேதனை அடைந்தனர்.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் முறையிட்ட போது போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறினார். இதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
தேர்வு எழுத வந்தபோது உடமைகளை அருகே உள்ள ஒரு பாதுகாப்பு மையத்தில் வைத்திருந்தோம். தேர்வு எழுதிவிட்டு மீண்டும் எடுக்க வந்த போது செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் கேட்டபோது சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அறையின் ஜன்னல் வழியாக குரங்குகள் வந்து அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டன.
குரங்குகள் செல்போன்களை எடுத்துச் சென்று விட்டன எனக் கூறுகின்றனர். இதனை எங்களால் நம்ப முடியவில்லை. இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.