நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 20-ந்தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* நீட் 3 முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 1. சுமையைக் குறைத்தல், 2. வணிகமயமாக்கலை ஒழித்தல், 3. தரத்தை மேம்படுத்துதல். இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தோல்வியடைந்துள்ளது.
* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது, அவ்வளவு தான்.
* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.
* தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.