

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“நீதியும், நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. அடிப்படையில் நீட் தேர்வு நியாயமற்றது. எல்லா மாநிலங்களைப் பற்றியும் என்னால் பேச முடியாது என்றாலும், தமிழ்நாட்டைப் பற்றி என்னால் உறுதியாகப் பேச முடியும்.
பாஜகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து தீர்மானங்களையும், மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளது.
நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யுங்கள்.
நாளை வெளியாகவுள்ள 'தி இந்து' நாளிதழில் எனது கருத்துக்கட்டுரையை வாசியுங்கள்; அதில் நீட் தேர்வு ஏன் அடிப்படையில் நியாயமற்றது மற்றும் அது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.