தமிழக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.- கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடப்போடவில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், காலியாக உள்ள மதுராந்தகம் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

இடைத்தேர்தல்

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகி விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் எம்எல்ஏ பொறுப்பை ஏற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அத்தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வென்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் இதுவரை காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட உள்ளது.

இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதுராந்தகம் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

போட்டியில்லை

இதற்கிடையே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடப்போடவில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.