குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.
அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.
இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். எனினும் கர்ப்பமானதை அவர் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு சென்று அவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.