தெலுங்கானாவில் போக்சோ வழக்கில் கைதான வாலிபர் வெறிச்செயல்: மனைவி-குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலை

போக்சோ சட்டத்தில் கைதான ராஜ்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது குடும்பத்தினரையும், தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரையும் ஒட்டு மொத்தமாக கொலை செய்ய முடிவு செய்தார்.
ராஜ்குமார்
Published on

தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவை மிஞ்சும் வகையில் நேற்று நள்ளிரவில் அரங்கேறி உள்ள இந்த பரபரப்பான கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், தெய்வலகுடா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சரிதா, இவர்களுக்கு 4 வயதில் பரிஷித், 2 வயதில் தைவித்ஷித் என்ற மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் ஷபாத் என்ற இடத்தின் அருகில் பி.ஆர்.ஆர். ஸ்டேடியம் பகுதியில் வசித்து வந்த லட்சுமி என்ற பெண்ணையும், அவரது 17 வயது மகளையும், ராஜ்குமார் பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மே மாதம் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

மனைவி உடந்தை

17 வயது சிறுமிக்கும், அவரது தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ராஜ்குமாரின் மனைவி குரல் கொடுத்துள்ளார். கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்றும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இப்படி ராஜ்குமார் சிறை செல்வதற்கு மனைவி சரிதாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் கைதான ராஜ்குமார் கடும் கோபத்துடனேயே சிறைக்கு சென்று உள்ளார்.

ஜாமினில் வந்தார்

சிறையில் இருந்த போது மனைவி மீதும், தன் மீது புகார் அளித்த சிறுமி மற்றும் குடும்பத்தினர் மீதும் ராஜ்குமார் கடுமையான கோபத்திலேயே இருந்து உள்ளார். ஜாமினில் வெளியே வந்ததும் அவர்களை தீர்த்துக்கட்டுவதற்கு அவர் சிறையில் வைத்தே முடிவு செய்தார்.

இந்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைதான ராஜ்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது குடும்பத்தினரையும், தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரையும் ஒட்டு மொத்தமாக கொலை செய்ய முடிவு செய்தார்.

காரில் சென்றார்

நேற்று இரவு தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு ஷபாத் பகுதியில் உள்ள புகார் கொடுத்த பெண்ணின் வீட்டிற்கு ராஜ்குமார் சென்றார். இரவு 10.45 மணியளவில் சிறுமியின் வீட்டுக்கதவை ராஜ்குமார் தட்டி உள்ளார்.

இந்த நேரத்தில் யார் எழுப்புகிறார்கள் என எண்ணியபடியே சிறுமியின் தாய் லட்சுமி கதவை திறந்தார். அப்போது வெறி பிடித்தவர் போல காணப்பட்ட ராஜ்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக லட்சுமியை வெட்டி சாய்த்தார்.

துடிதுடித்து பலி

இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதை தொடர்ந்து ஆத்திரத்துடன் வீட்டுக்குள் ஓடிய ராஜ்குமார் அங்கு தூங்கிக் கொண்டு இருந்த லட்சுமியின் 60 வயது தாய் ருக்கம்மாவையும் படுக்கையிலேயே சரமாரியாக வெட்டினார். இதில் ருக்கம்மாவுக்கும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. சம்பவ இடத்திலேயே அவரும் துடிதுடித்து பலியானார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

இதன் பிறகும் ஆத்திரம் தீராத ராஜ்குமார் வீட்டில் 2 கொலைகளையும் நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்த 17 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கிக் கொண்டு தனது காரில் கடத்தி சென்றார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று காரில் இருந்து சிறுமியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்றார். பின்னர் ஏரி பகுதியிலேயே உடலை வீசி விட்டு அங்கிருந்து காரில் ராஜ்குமார் தனது வீட்டுக்கு சென்றார்.

மனைவி, குழந்தைகள்

பின்னர் நேற்றிரவு 11.45 மணி அளவில் தனது குடும்பத்தினரையும் ஈவு இரக்கம் இன்றி கொலை செய்தார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தனது மனைவி சரிதா மற்றும் 2 ஆண் குழந்தைகளையும் துடிக்க துடிக்க வெட்டி கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய ராஜ்குமார் தனது தந்தைக்கு போன் செய்து நான் சிறை செல்வதற்கு காரணமாக இருந்த மனைவி மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், எனது குழந்தைகள் ஆகியோரை கொன்று விட்டேன். நானும் தற்கொலை செய்யப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இந்த கொலை சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 6 பேரை கொடூரமாக கொன்ற சைக்கோ கொலையாளியான ராஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். அவர் தனது தந்தையிடம் உயிரை மாய்த்துக் கொள்வதாக போனில் தெரிவித்தார். இதனால் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு எங்காவது தப்பி ஓடி விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக அம்மாநில போலீஸ் அதிகாரி தருண் ஜோஷி கூறும் போது, ‘ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுக்கும் குறைவாக

குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் இடம்பெற்று இருந்ததால் அவருக்கு கோர்ட்டில் ஜாமின் கிடைத்து உள்ளது என்றும் தான் சிறை செல்வதற்கு காரணமானவர்கள் மீது ஏற்பட்ட கடுமையான கோபமே அவரை இந்த செயலுக்கு தள்ளி உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்குமாருக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கொலையாளி ராஜ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி ஷபாத்- கண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சினிமாவை மிஞ்சும் 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட கொலையாளி

கொலையாளி ராஜ்குமாருக்கு பந்தயம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருந்து உள்ளது. கடன் வாங்கி சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் ரூ. 1.5 கோடி கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ராஜ்குமாரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்லவில்லை

6 பேரை கொடூரமாக கொன்ற ராஜ்குமார் தன் மீது புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்கு சென்று 3 பேரை கொன்ற நிலையில் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை கொலை செய்யாமல் விட்டு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. 6 பேரை அடுத்தடுத்து கொன்ற நிலையிலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது மட்டும் இரக்கப்பட்டு ராஜ்குமார் அவரை மட்டும் கொலை செய்யாமல் இருந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com