தமிழக செய்திகள்

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் பரிசீலனை செய்து அகற்றப்படும்- அமைச்சர் விக்னேஷ்

தமிழகம் முழுவதும் உள்ள கடைகளின் பட்டியலை மீண்டும் மறுஆய்வு செய்து, புதிய பட்டியல் தயாரிக்கும் பணிகளைத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடந்த ஜமாபந்தியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்ட பின்பும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்குப் பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்டிப்பாக அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும்.

இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளின் பட்டியலை மீண்டும் மறுஆய்வு செய்து, புதிய பட்டியல் தயாரிக்கும் பணிகளைத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்துவது மற்றும் கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய சட்டவரைவு தயார் செய்யப்பட்டு வருகிறது. இது அரசின் உயர்மட்ட அளவிற்கு உடனே கொண்டு செல்லப்பட்டு, விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்றார்.