தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.
மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அதன் விவரம் வருமாறு:-
ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.
கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆதவ் பதில் அளித்துள்ளார்.
"தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? என்று எம்எல்ஏ காமாட்சி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்," நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.