

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.
இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.
தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.
அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.