தமிழக செய்திகள்

கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தில் செய்த ஊழலை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவோம்- அமைச்சர் நிர்மல் குமார்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். அதற்கான காரணம் தெரியாது.

மதுரையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த பின்னர் ஊழலற்ற வெளிப்படை தன்மையுடன் நிர்வாகம் இருக்கிறது. தற்போது சோலார் மின் இணைப்பு பெறுவதிலே கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் முறைகேடுகள், விதி மீறல்கள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்திருக்கின்றோம்.

தற்போது மின்வாரியத்தை 5 மண்டலங்களாக பிரித்து செயல்படுத்த இருக்கிறோம். வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சோலார் மின் இணைப்புகள் அதிகப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும்.

மின்சாரத்துறை சார்பில் அடுத்த வாரத்தில் வெள்ளை அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும். அதில் மின்சாரத்துறையின் நிலைமை என்ன, இந்த துறையில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது வெளியிடப்படும். எந்தெந்த இடத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவோம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். அதற்கான காரணம் தெரியாது.

மின்சாரத் துறையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வேலைக்காக காத்திருப்போர்களையும், கணக்கீடு செய்யப்படும்.

தற்போது மின்தடை எதனால் ஏற்படுகிறது எவ்வளவு நேரம் எந்த பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டிரான்ஸ்பார்மர் ஊழல் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதை விரைவாக முடிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது.

ஆனால் ஒன்றிய அரசு தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதினால் இதுவரை கவர்னருக்கு அனுப்பப்பட்ட தமிழக அரசின் கோப்புகளுக்கு எந்தவித ஒப்புதலும் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.