மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு வாங்கினால் நீங்கள் கேட்கலாம் என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயராது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மின்சாரக் கொள்முதல் மற்றும் மின் கட்டணம் தொடர்பான பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்குத் தேவையில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு தற்காலிகமான சூழ்நிலைதான் என்றும், விரைவில் நிலைமை முற்றிலும் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின் தேவை அதிகரிப்பு குறித்து விளக்கிய அவர், "காற்றாலைகள் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. மேலும், மழைப் பொழிவு இல்லாததும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் மின்சாரத்தின் தேவை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் தேவைக்கேற்ப எந்த மாநிலம் மின்சாரம் கொள்முதல் செய்தாலும் இதே நிலைதான் ஏற்படும். அண்டை மாநிலங்கள் முன்கூட்டியே இதற்குரிய ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம்" என்று கூறினார்.
மேலும், மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டால் அது குறித்துக் கேள்வி எழுப்ப உரிமையுண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் விலைவாசிதான் முதலிடத்தில் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார். அண்மையில் எவ்வித லஞ்சமும் சிபாரிசும் இன்றி, தகுதியின் அடிப்படையில் 4,724 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதே இதற்குச் சிறந்த சான்று என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மக்களுக்குத் தேவையான அனைத்துத் துறை சார்ந்த சேரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்சார விநியோகத்தில் நிலவும் தற்காலிகத் தடையைச் சரிசெய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.