கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை வலியுறுத்தியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிலிகுண்டுலுவில் தொடங்கி பூம்புகார் வரை மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயண விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவர் சீர்காழி அருகே பூம்புகாரில் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் பூம்புகார் தருமகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு விவசாயிகள், கட்சியினர் ஏர் கலப்பையை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறார்கள். காவிரி நீரை நம்பி தான் தமிழக விவசாயிகள் உள்ளனர். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காது.
தமிழக விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலை ஏற்படும். இதனை தடுக்க எல்லோரும் ஒன்றுசேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பா.ம.க.வுக்கான பிரச்சினை இல்லை. தமிழ் நாட்டு விவசாயிகளின் பிரச்சினை, மக்களின் பிரச் சினை. தண்ணீர் இல்லை என்றால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்.
காவிரி தண்ணீர் இல்லை என்றால் தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் சோறு கிடைக்காது.மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போகும். கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக் குமார் அணை கட்ட முயற்சிக்கிறார். அதற்காக கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்திக்கின்றனர்.
எனவே இதனை தடுக்க தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கர்நாடக அரசின் செயலுக்கு மத்திய அரசு மவுனம் காக்கிறது.
தமிழத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட விடக்கூடாது. அதற்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
மேலும் தமிழக விவசாயிகளின் பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சமூக வலைதளம் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களால் மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாதா? 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. எனவே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடிவு செய்தால், அதை தடுக்க பா.ம.க. தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.