மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதி லில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங் கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருந்தார். அதில்,
காவிரி நதி வெறும் நீருக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையும், நீதித்துறை முடிவுகளையும் நிலைநாட்ட பிரதமர் இதில் தலையிட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும். நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பாகும் என்ற தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேகதாது அணை பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.