நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே

மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்
தீப்கே, மோடி
தீப்கே, மோடி
Published on

அபிஜித் தீப்கேவின் சிஜேபி தலைமையில் ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை அடுத்து கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் குறித்து மௌனம் கலைத்து, விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு மசோதா, உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து இன்ஸ்டா வீடியோவாக பேசி வெளியிட்டார்.

'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா - 2026' நேற்று முன் தினம் மக்கலவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் நிரைவேற்றப்பட்டது. அதன் பின் பிரகலாத் ஜோஷி கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் தண்டனை உள்ளிட்ட 'கடுமையான' தண்டனைகள் வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது என நேற்று இந்த மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் கார்கே சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

செல்பி வீடியோ

இதனிடையே மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி மீண்டும் ஒரு செல்பி பாணியில் வீடியோ பேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், 'வினாத்தாள் கசிவு' மாபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான சட்டங்கள் மூலம் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வெளியான அவரின் வீடியோ பதிவில் கமண்ட் செய்த சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.

சிஜேபி எதிர்ப்பு

இந்தச் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பிருந்தே சிஜேபி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக சிஜேபி தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், "வினாத்தாள் கசிவை முன்கூட்டியே எவ்வாறு தடுப்பது என்பதற்குப் பதிலாக, கசிவு நடந்த பிறகு வழங்கப்படும் தண்டனைகளில் மட்டுமே இந்தச் சட்டம் கவனம் செலுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.

அத்துடன் தேசிய தேர்வு முகமையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தீப்கே பேட்டி

இதுகுறித்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, "நாட்டில் தொடர்ந்து சட்டங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் எண்ணம் சரியாக இல்லாத வரை எதுவுமே மாறாது.

வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். ஆனால், சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகாததால் இதன் முதல் விசாரணையே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டங்களை இயற்றுவதை விட அதை அமல்படுத்துபவர்களின் செயல்பாடே இங்கு முக்கியம்." 4என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான இன்ஸ்டா வீடியோ பதிவுகளை விமர்சித்த தீப்கே, "மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்" என்றும் சாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com