சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
கார்கே, ராதாகிருஷ்ணன்
கார்கே, ராதாகிருஷ்ணன்
Published on

சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு, பொதுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா 2026 ஐ கொண்டுவந்துள்ளது. நேற்று முன் தினம் மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையில் 8 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்தின் பின்னரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

திட்டமிட்டு முறைகேடு செய்யும் அமைப்புகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்புத் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.

ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்

முன்னதாக விவாதத்தின்போது மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் கார்கே மத்திய அரசின் கல்வி முறையை கடுமையாக விமர்சித்தார்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போதைய கல்வி முறை மனுஸ்மிருதியின் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் சாதிப் பாகுபாட்டையும் சமத்துவமின்மையையும் ஊக்குவிப்பதாக சாடினார்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தேர்வு முறைகேடுகள்

விவாதத்தின் கருப்பொருளான தேர்வு முறைகேடுகள் கமசோதா குறித்து பேசிய கார்கே, வெறும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதன் மூலம் மட்டும் வினாத்தாள் கசிவைத் தடுத்துவிட முடியாது, தேர்வு முகமைகளில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நட்டா பதில்

அவைத் தலைவர் ஜே.பி. நட்டா கார்கேவுக்கு பதிலளித்து பேசுகையில், மனுஸ்மிருதி தொடர்பான தனது கூற்றுகளுக்கு கார்கே தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.

உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அவைக்குப் புறம்பான வார்த்தைகளையோ எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய நட்டா, கார்கேவின் குறிப்பிட்ட கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனச் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் தலையீடு

இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்ததை தொடர்ந்து தலையிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மனுஸ்மிருதி தொடர்பாக கார்கே கூறிய கருத்துகள் மற்றும் மேற்கோள்கள் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இடம்பெறாது என உத்தரவிட்டார்.

சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com