

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.
அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.
தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.
இதன்படி நேற்று, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர் மாணவர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தள வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தீப்கே கூறியதாவது, "பிரதமர் மோடி இப்போது ஒரு இன்புளூயன்சராக மாறலாம். அவர் அந்த வேலையை மிகவும் சிறப்பாகச் செய்கிறார். எனவே, அவர் பிரதமர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்புளூயன்சராக மாறட்டும். நாட்டின் ஆட்சியை வேறு ஏதேனும் தலைவர் கவனிக்கட்டும்" என்று கூறினார்.
மேலும், போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னரும், பல்வேறு மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிட்ட அமித் ஷா உட்படப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. மத்திய அரசு தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து ஆட்சியையே மாற்றுவோம்" என்றும், அடுத்தகட்டப் போராட்டம் இதைவிட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரித்தார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பின் சிஜேபி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.