தமிழக செய்திகள்

Iran War | தீப்பெட்டி தொழிற்சாலைகள் 12-ந்தேதி முதல் மூடல் - பாதிப்பு அடையும் 5 லட்சம் தொழிலாளர்கள்

மெழுகு, அட்டை, பாலித்தீன் பைகள் ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது.

தமிழகத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சாத்தூர், சிவகாசி, குடியாத்தம், காவேரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 50 முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 320 பகுதி எந்திர தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் இயங்கிவருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவற்றில் 90 சதவீதம் பெண்கள் அடங்குவார்கள்.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மெழுகு, அட்டை, பாலித்தீன் பைகள் ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தி உள்ளன. கடந்த சில மாதங்களாக ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ மெழுகு தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங்க்கு தேவையான பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து உள்ளது. பாஸ்பரஸ். குளோரைடு பேப்பர், அட்டை என அனைத்து மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து இருப்பதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு இருப்பதால் வருகிற 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 2 வாரங்கள் தீப்பெட்டி ஆலைகளுக்கு விடுமுறை விட்டு மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மா.பரமசிவம் தெரிவித்தார்.