தமிழக செய்திகள்

உச்சநீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றியவர்: ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு நீதிமன்றத்திற்கே தவறானத் தகவல்களை அளித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொய்யான தகவல்களைக் கூறி உச்சநீதிமன்றத்தையும் நாட்டின் பொதுமக்களையும் ஏமாற்றிவிட்டார் என்றும், எனவே அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் சேர்க்கைக்கான படிவம்-6 இல் புதிதாகச் சேர்க்கப்பட்ட விபரங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து அரசியல் வட்டாரத்திலும் நீதிமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில், படிவம்-6 இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றமே ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொய்யான தகவலைத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தையும் நாட்டின் மக்களையும் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நேர்மையற்றவர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு நீதிமன்றத்திற்கே தவறானத் தகவல்களை அளித்திருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாக கேட்கப்பட்ட விபரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக! நேர்மையற்ற இவர் ஒரு நிமிடம் கூட அப் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க மத்திய அரசும் உரிய அதிகார அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாகப் படிவம்-6 திருத்தங்கள் ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டார் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரடியாகவே அவரது பதவி நீக்கத்தை வலியுறுத்தியிருப்பது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT