மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கித் துறையில் ஏழை எளிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் அடிப்படை வங்கி கணக்கு. நோ பிரில்ஸ் அக்கவுண்ட் அதாவது அலங்காரம் இல்லாத வங்கி கணக்கு என்ற பெயரில் ஏழை மக்களுக்காகவே இந்த கணக்கு துவங்கப்பட்டது. பின்னாளில் இந்த கணக்கிற்கு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்று பாஜக அரசாங்கம் பெயரிட்டது. 56 கோடி அத்தகைய கணக்குகளில் 53 கோடி கணக்குகள் அரசு வங்கிகளால் திறக்கப்பட்டன. அத்தகைய கணக்குகளுக்கு அபராதம் விதிக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
மாதம் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து நேரடியாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணம் எடுக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; இதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஆக ஒவ்வொரு முறையும் 17 ரூபாய் 70 பைசா அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதாக தெரிகிறது.
எனவே ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று தெரிகிறது. ஒருபுறம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்த அரசு கடந்த பாராளுமன்ற தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பண பரிவர்த்தனைக்கு மீண்டும் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வாறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மக்களுக்கும் அபராதம் என்று விதித்து எல்லா வகையிலும் ஏழை மக்களை வதைக்கிறது இந்த அரசு.
2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி இந்த அரசு தள்ளியது. இருப்பினும் 2017 ஜனவரி மாதம் இருந்த பணப்புழக்கமான 9 லட்சம் கோடியில் இருந்து இன்று 43 லட்சம் கோடி அளவிற்கு
பணப்புழக்கம் உயர்ந்துள்ளது. அதாவது இன்றளவிலும் கணிசமான பகுதி மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் மின்சார வசதி இல்லாமல் பனப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை நிலையை தான் இது பிரதிபலிக்கிறது. இந்த மக்களை கட்டணம் என்ற பெயரில் தண்டிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.
ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.