தமிழக செய்திகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் தாமதிக்காமல் தன் பதவியை விட்டு வெளியேற வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

அதிகாரத் திமிரை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்!

அமித்ஷாவின் உத்தரவுகளுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாருக்கு எள்ளளவும் தார்மீக உரிமையில்லை! என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மோடி–அமித்ஷாவின் சொல்பேச்சுக் கேட்கும் பொம்மையாகி மக்களின் அடிப்படை வாக்குரிமையையே வேரறுக்கத் துணியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கணப்பொழுதும் தாமதிக்காமல் தன் பதவியை விட்டு வெளியேற வேண்டும்!

ஜனநாயகத்தின் ஆணிவேரான பிரிவு 324-ஐ முடக்கி, மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் பாஜக - ஆணையத்தின் கூட்டு அநீதியை அம்பலப்படுத்தி, தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள சமரசமற்ற போராட்டம் இன்று 1000 இடங்களில் நாடு தழுவிய பேரெழுச்சியாய், அதிகாரத் திமிரை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்!

தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்களையும் சட்டவிரோத வாக்காளர் பட்டியல் திருத்தங்களையும் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் (மதுரை மாவட்டம் தவிர)உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முழு எழுச்சியுடன் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

மக்களாட்சியின் மாண்பையும் மக்களின் வாக்குரிமையையும் மீட்டெடுக்கக் காங்கிரஸ் பேரியக்கம் சமரசமில்லா அறப்போரில் அணிவகுத்து நிற்கிறது; அமித்ஷாவின் உத்தரவுகளுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாருக்கு எள்ளளவும் தார்மீக உரிமையில்லை!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT