தமிழ்நாட்டில் மதுபானம் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி விதிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம், 2006-ல் 3-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை இந்த வரியை விதிக்கலாம். எந்த வகையான மதுபானத்துக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு அறிவிப்பு மூலம் நிர்ணயிக்கலாம். வெவ்வேறு வகையான மதுபானங்களுக்கும். வெவ்வேறு அளவுகளில் உள்ள பாட்டில்களுக்கும் வெவ்வேறு வரி விகிதங்களை நிர்ணயிக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி மூலம் கிடைக்கும் தொகையை மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பாக அகற்றுதல், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்கத்தை விடுவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், அவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கவும், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளவும் இந்த தொகையை பயன்படுத்தலாம்.
மேலும், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல் மற்றும் சமூக நலனுடன் தொடர்பு டைய பிற பணிகளுக்கும் இந்த தொகையை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு விரைவில் மதுபான பாட்டில்களின் விலையை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.