தமிழக செய்திகள்

“குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!

கம்யூனிஸ்டுகளைப் போல் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி.

சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், திமுகவை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேற ஒரு முக்கிய காரணம் தேமுதிக என, அக்கட்சிமீது சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் திருமாவளவனின் விமர்சனங்கள் குறித்து இன்று பதிலளித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.,

மரியாதை உள்ளது...

“திருமாவளவன்மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது. 2015-ல் இவரும் சேர்ந்ததுதான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார். முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றவர். ஒரே வார்த்தையில் பதில் கூறுவேன். யாரையும் காயப்படுத்தக் கூடாது என பார்க்கிறேன்.

அவர் எனக்காக பிரசாரம் செய்ததை மறக்கமாட்டேன். அவர் வேண்டுமானால் மாற்றிப் பேசலாம். அதற்கான நன்றியுணர்வு என்னுள் இருக்கிறது.

அமைச்சர் பதவிக்காக வெளியேறல்

இன்று அமைச்சர் பதவி கிடைத்ததால், அவர் வேறு கூட்டணிக்கு சென்றுள்ளார். கம்யூனிஸ்டுகளைப் போல் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி.

நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.

முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை ஸ்டாலின் கூடுதலாக கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.

மீசையில் மண் ஒட்டவில்லை

இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும். உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது சென்றீர்கள்.

இதுதான் உண்மை. எதற்காக தேமுதிகமீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

இதனால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என அவர் கூறினால், இது உண்மைக்கு புறம்பான பதில் என அனைவருக்கும் தெரியும். ” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT