தமிழக செய்திகள்

திருமணத்தில் தங்கத்திற்கு பதில் நிலம்: தமிழகத்தில் புதிய கலாசாரம் பரவுகிறது

தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், மகளின் திருமணத்திற்காக அவள் சிறு வயது முதலே சிறுகச் சிறுகப் பணம் சேமித்து வைப்பது வழக்கம்

"என்னப்பா! பத்திரிகை எல்லாம் வைத்தாச்சு... இந்த விலைவாசி விக்கிற விக்கில பொண்ணுக்கு எவ்வளவு நகை போடப்போற? அத சொல்லவே இல்லையே?"

தனது நெருங்கிய நண்பரின் மகள் திருமண அழைப்பிதழை நீட்டியபோது, மற்றொரு நண்பர் எதார்த்தமாகக் கேட்ட கேள்வி இது. அதற்கு அந்தத் தந்தை சிரித்துக்கொண்டே, "ஒரு பவுன் நகைகூட இல்லை. அதற்கு பதிலாக எங்கள் பூர்வீக ஊரில் இருக்கும் 2 சென்ட் இடத்தை மகள் பெயரில் எழுதி கொடுக்கப் போகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட நண்பர் ஆச்சரியமடைந்தாலும், உடனே ஆமோதித்தார்.

"அதுதான் சரி. எனக்குத் தெரிந்தே சமீபத்தில் மூன்று திருமணங்களில் நகைக்குப் பதிலாக நிலத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.

இந்த உரையாடல் ஏதோ ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட கதை அல்ல. தங்கம் விலை எட்டாக்கனியாக உயர்ந்து வரும் சூழலில், தமிழகத்தின் பல நடுத்தரக் குடும்பங்களில் இன்று ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புதிய எதார்த்தம் இது. பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காகத் தங்க நகைகளைச் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக, தங்களிடம் இருக்கும் நிலம், வீடு, காலி மனை போன்ற சொத்துகளை மகள்களின் பெயரில் எழுதிக் கொடுக்கும் புதிய கலாச்சாரம் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.

உலகத் தங்கக் கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே அதிக தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் சுமார் 40 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களிலேயே நடைபெறுகிறது. அதிலும், அதிக தங்கம் வாங்கப்படும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சராசரியாக 150 முதல் 200 டன் வரை தங்கம் விற்பனையாகிறது. இதில் 70 முதல் 80 சதவீதம் தங்கம் திருமணங்களுக்காகவே வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், மகளின் திருமணத்திற்காக அவள் சிறு வயது முதலே சிறுகச் சிறுகப் பணம் சேமித்து வைப்பது வழக்கம். தபால் நிலையம், வங்கி, காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இந்தச் சேமிப்பு நடைபெறுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தந்தை தனது மகளின் திருமணத்திற்காக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தால், ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரம் என்ற விலையில் 10 பவுன் நகையை வாங்க முடிந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அதே ரூ.5 லட்சத்தில் 4 பவுன் நகையைக்கூட முழுமையாக வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத் திருமணங்களில் மணமகளின் வசதிக்கேற்ப குறைந்தபட்சம் சில பவுன்களாவது நகை அணிவித்து அனுப்புவது நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களில் தங்க விலை கண்டிராத உயர்வை எட்டியதால், சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நகை வாங்குவதே பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதனால், திருமண மேடையில் தங்கம் ஜொலிப்பதை விட, மகளின் பெயரில் இருக்கும் நிலப் பத்திரமோ, வீட்டுச் சொத்தோ அவளது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் வழங்கும் என்ற எண்ணம் பெற்றோர்களிடையே வலுப்பெற்று வருகிறது. நகை என்பது காலப்போக்கில் கரையக்கூடிய சொத்து. ஆனால் நிலம் என்பது தலைமுறைகளைத் தாண்டி மதிப்பு உயரக்கூடிய சொத்து. இந்தப் புரிதலே பல குடும்பங்களை புதிய முடிவுகளுக்கு வழிநடத்துகிறது.

ஆனால் இங்கேதான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

நிலம், வீடு, காலி மனை போன்ற சொத்துகள் கைவசம் உள்ள பெற்றோர்கள் இவ்வாறு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சொத்தே இல்லாத, மாத வருமானத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் என்ன செய்வார்கள்? தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால், அவர்களின் மகள்களின் திருமணக் கனவுகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?