சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தண்ணீர் தேவை அதிகரிப்பால் பூண்டி, புழல் உள்ளிட்ட சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வந்தது. இதையடுத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 23-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இப்போது ஆந்திர விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை என்பதால் கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக மொத்தம் 1900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திர விவசாயிகள் எடுத்தபோது மீதி உள்ள சுமார் 300 கனஅடிக்கு மேல் தண்ணீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 285 கனஅடி தண்ணீர் வருகிறது.
இதுவரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ½ டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 1087 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.ஏரிக்கு 285 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியில் 34.66 சதவீதம் தண்ணீர் உள்ளது.
இதேபோல் புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தண்ணீர் இருப்பு 1647 கனஅடியாக உள்ளது. இதேபோல் சோழவரம் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி ஆகும். இதில் வெறும் 84 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கஅடியில் 2950 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது 80.93 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும்.மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் கடலூர் மாவட்ட த்தில் உள்ள வீராணம் ஏரியில் 1465 மி.கனஅடியில் 451 மி.கனஅடி(30.80 சதவீதம்) தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணா தண்ணீர் வரத்து மற்றும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.