தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

கொளத்தூர் தொகுதியில் த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க., சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

வழக்கு தொடரவில்லை

பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை.

கோரிக்கை

இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக்காக தள்ளிவைத்தனர்.

தீர்ப்பு

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.