தமிழக செய்திகள்

கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

கரூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.

கரூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். அதனை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கரூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளை வென்ற த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பின்னர் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றார்.

இதனிடையே உட்கட்சி பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் ஒரு பிரிவாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தனர். இந்த 25 பேரில் முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

த.வெ.க. கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க, கடந்த மே 13-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 பேரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த மனு ஆய்வில் இருந்தபோதே 25 பேர் பிரிவில் இருந்த சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் வெற்றி பெற்றிருந்த 4 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டது. இருபிரிவினரும் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். ராஜினாமா செய்த 4 பேர் தவிர மீதமுள்ள 21 பேரையும் (சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்பட) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளபடி மன்னித்துவிடலாம். அவர்கள் மீது கட்சித்தாவல் தடைசட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்டு, 21 பேர் மீதான மன்னிப்பும் ஏற்கப்படுவதாகவும், ராஜினாமா செய்துள்ள 4 பேர் மீது கட்சித்தாவல் தடைசட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்க இருப்பதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சமீபத்தில் அறிவித்தார். மேலும், அந்த 4 பேருக்கும் ஒரு வாரகால விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் விளக்கமும் அளித்துவிட்டனர்.

திடீர் ராஜினாமா

சி.விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி காலையில் சமூகவலைத்தளத்தில் கட்சி தலைமைக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு இருந்தார். பின்னர் அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்தார்.

இதையடுத்து சபாநாயகர் வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற விதி 21-ன் அடிப்படையில், விராலிமலை எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதி 22-ன்படி முறையாக இருப்பதால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த டாக்டர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க.வில் இருந்தும் விலகினார். அவர் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் அவர் த.வெ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதனிடையே தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த அவர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்து, கரூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பை காலை 11.14 மணிக்கு செய்தித் துறை படத்துடன் வெளியிட்டது. அதில், சட்டமன்ற விதி 21-ன் அடிப்படையில், கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதி 22-ன்படி முறையாக இருப்பதால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கரூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியோடு சேர்த்து 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.