சென்னை:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
இதற்காக கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட 30 பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஏற்கனவே 2, 3 முறை கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
மேலும் 2 பேர் வீதம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று முக்கிய பிரச்சனைகளை ஆய்வு செய்து வரும்படி அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த குழுவினர் சேகரித்து வரும் தகவல்கள் தேர்தல் அறிக்கை குழுவில் விவாதிக்கப்பட்டு வாக்குறுதிகளில் சேர்க்கப்படும்.
இன்று சத்தியமூர்த்தி பவனில் கார்த்தி சிதம்பரம் தேர்தல் அறிக்கை குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிக்கை முழுவதும் தயாராகி விடும். காங்கிரஸ் வெளியிடப் போகும் அறிக்கை தமிழக மக்கள் மனதில் இடம் பிடிப்பதாக அமையும். அறிக்கை தயாரானதும் டெல்லி அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைப்போம். அகில இந்திய தலைமையின் ஒப்புதல் பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றார்.
காங்கிரஸ் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் சிலவற்றை தனியாக தேர்வு செய்து அஞ்சல் அட்டையில் பிரிண்ட் செய்து காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் அனுப்பி வைக்க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.