

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, கூடுதல் தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் இரு கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் இன்னமும் சவ்வு மிட்டாய் போல் இழுத்து வருகிறது.
தி.மு.க.வினர் ஒருபுறம் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று புதுவை தனியார் ஓட்டலில் புதுச்சேரி தி.மு.க. பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாஜிம் ஆகியோர் காத்திருந்தனர். அதேபோல் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வருகை தந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணி வரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் வெகுநேரம் காத்திருந்த ஜெகத்ரட்சகன் எம்.பி. நேற்றிரவு மாநில அமைப்பாளர் சிவாவுடன் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. இடையே மீண்டும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
இதுதொடர்பாக ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறுகையில், ‘புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தை போல் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் முடிவு குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை விட அவர்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருந்து இருக்கலாம். அதனால் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்' என்றார்.
நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், புதுச்சேரி தி.மு.க. பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தொகுதி உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் காங்கிரஸ்-தி.மு.க. தனித்தனியாக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.