தமிழக செய்திகள்

2029-ல் பிரதமர் யார்?- தவெக Vs காங்கிரஸ் இடையே முற்றும் வார்த்தை மோதல்

2029-ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் .

2029ல் பிரதமர் வேட்பாளர் முதலமைச்சர் விஜய்தான். தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த ராகுல்காந்தி தான், பிரதமராகவும் அமர வைப்பார் என தவெக MLA கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

2029-ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய் தான். தளபதிதான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் இப்போது சொல்கிறேன் 2029-ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் .

மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை.

ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார்

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ளனர் என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பட் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் கூறியதாவது:-

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.

தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் ராகுல் காந்திதான் பிரதமர்.

இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்.

காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என கூறினார்.