தமிழக செய்திகள்

நாள்தோறும் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை வேதனை அளிக்கிறது - கனிமொழி

வழிநடத்த ஆளின்றி குற்றவாளிகளாக உருவெடுக்கும் இளம்தலைமுறையினரைக் கைக்கொள்ள முடியாமல் இந்தச் சமூகமே திணறிக்கொண்டிருக்கிறது.

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுவன், 17 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நாகர்கோவிலில் கூலித்தொழிலாளர்கள் இருவர், மதுபோதையிலிருந்த கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும், காரைக்குடி ஆனந்தநகர் பகுதியில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் வருகின்றன. நாள்தோறும் அதிகரித்தபடி இருக்கும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் வேதனை அளிக்கிறது.

ஒருபுறம் இந்த நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் சீர்கெட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம், வழிநடத்த ஆளின்றி குற்றவாளிகளாக உருவெடுக்கும் இளம்தலைமுறையினரைக் கைக்கொள்ள முடியாமல் இந்தச் சமூகமே திணறிக்கொண்டிருக்கிறது.

சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு - சீர்திருத்த பணிகள் ஏராளமாக உள்ள நிலையில், அதற்கு முதன்மை ‘பொறுப்பேற்று’ செயல்பட தவெக அரசு மறுப்பதே, இப்பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் காரணமாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.