தமிழக செய்திகள்

சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் என்று திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

மெட்ராஸ் மாகாணம்

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் சென்னையை விலைக்கு வாங்கியது. அப்போது, 'மதராசபட்டிணம்' என்று அழைக்கப்பட்ட சென்னை விடுதலை பெற்ற பின்னர் 'மெட்ராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டது.

சென்னப்ப நாயக்கர்

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

சென்னை தினம்

பத்திரிகையாளர்கள் சசி நாயர், வின்சென்ட் டி சோஸா மற்றும் வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா ஆகியோரின் முயற்சியால் 2004-ம் ஆண்டு முதன்முதலில் சென்னை தினம் கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை மாநகரம்

சென்னை மாநகரம் இன்று தனது 387-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 387 ஆண்டுகள் ஆகிறது.

கனிமொழி

சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.

வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம்.

சென்னை நாள் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.