

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ரமேஷின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு- தற்போதைய த.வெ.க. அமைச்சர் ரமேஷ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
அமைச்சர் ரமேஷ்: திருக்கோவில் நிலங்களை மீட்டதாக சொன்னார்கள். ஆனா, இன்னொரு விசயத்தை சொல்ல மறந்து விட்டார்கள். இன்றைக்கு 40 ஆயிரத்து 245 ஏக்கர் தனி நபர் பெயரில் பட்டா மாறியிருக்கிறது. அதை மீட்கும் பெரும்பணி இந்த ஆட்சிக்கு இருக்கிறது. கணினி சிட்டா பதிவுகளின்போது ஏறத்தாழ 33,949 ஏக்கர் தவறுதலாக தனி நபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கு. அதை மீட்பதில் த.வெ.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து வகையிலான நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்த அரசு பணி செய்து கொண்டிருக்கிறது.
வள்ளலாருக்காக மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வந்ததாக சொன்னார்கள். கூடவே உண்மைக்கு மாறாக ஒன்றை சொல்லிவிட்டார்கள். அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம், எதிர்த்து விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்த விசயத்தில் யானை சபையின் பின்புறம் பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில், பெரிய திட்டத்திற்கான செயல்பாட்டை செய்திருந்தார்கள்.
இந்த பெருவழியை தவிர்த்து வேறு எங்கே வேண்டுமென்றாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்ற வள்ளலாரின் பக்தர்கள் கூறினார்கள். இதை துறை சார்பான அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பேசி முடிவு எடுக்கிறோம் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறோம். அதை கைவிடப்போறோம் என்று சொல்லவில்லை. பெருவழியை தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சருக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.
வாடகை கலெக்ஷன் உள்ளிட்டவைகளை பற்றி பேசினார்கள். 100 நாட்களில் ஏறத்தாழ 108 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2000 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் நிலுவையில் உள்ளது. அதையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 464 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கணினி சிட்டாவில் 349 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நகையை உருக்கியது பற்றி பேசினார்கள். அதில் எனக்கு எந்த மாற்ற கருத்தும் இல்லை. ஆனால், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. கடந்த பல வருடங்களாக நகையை மறுமதிப்பீடு செய்யாமல் வைத்துள்ளனர். 5 ஆண்டுக்கு ஒருமுறை நகையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என HRA சட்டத்தில் உள்ளது.
நகையை மறுதிப்பீடு செய்யாமல் நகையை உருக்கிவிட்டோம் என்று சொன்னால் எப்படி?. நகை மதிப்பீடு பணியை யார் செய்வது?. அதை மறுதிப்பீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொண்டிருக்கிறது.
மதுரை உறுப்பினர் அறங்காவலர்குழு பற்றியெல்லாம் பேசினார்கள். அறங்காவர்குழு நியமனம் எப்படி நடந்தது என்று சொன்னார்கள். விதிமுறை எல்லாம் பின்பற்றினார்கள். அதெல்லாம் சரிதான். மறைமுகமாக என்னவெல்லாம் நடந்துச்சி என்று கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில ஈடுபட்டனர். இதனால் மறைமுகமாக என்ற வார்த்தை நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சேகர்பாபு: சிவன் சொத்து குலம் நாசம் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்தவர்கள். ஆடிட் செய்வது அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகள் சார்ந்தது. ஆடிட்டை மத்திய அரசு செய்ய வேண்டும் என நினைத்தபோது, அதை நாம்தான் ஆடிட் செய்ய வேண்டும் என போராடி பெற்றது நாங்கள். எந்த அறங்காவலர் இவரிடம் அழுதார் என்பதை விளக்கினால் பொறுப்பேற்க தயாராக இருக்கிறோம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற குற்றத்தை அவைத் தலைவர்கள் பதிவு செய்யக் கூடாது.
அமைச்சர் ரமேஷ்: சிவன் சொத்து குலம் நாசம் என்கிறார்களே, நிறைய விசயங்களை எடுத்து வைத்துள்ளோம். விரைவில் ஆதாரங்களை வெளியிடுகிறோம்.
இவ்வாறு இருவருக்கும் இடையில காரசார விவாதம் நடைபெற்றது.