தமிழக செய்திகள்

மக்களை வரிசையில் நிற்க வைத்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - கனிமொழி

தற்போது சிலிண்டர் கியாஸ் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காண பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?

மதுரை:

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் என்றாலே சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்று சேர்ந்து இங்கு உருவாக்க முயன்ற கலவரம் தான் ஞாபகம் வருகிறது. அதை மறந்து விட முடியாது. காலங்காலமாக பல மதத்தினர் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வரும் மாநிலம் தமிழ்நாடு. மதத்தின் மேல் வெறுப்பும், காழ்புணர்வும் எந்த காலத்திலும் இல்லை. இதனால் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி உள்ளது.

பா.ஜ.க. நாட்டின் பல பகுதிகளில் மத கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலும் அதே விளையாட்டை விளையாடி பார்க்கலாம் என நினைத்தார்கள். ஆனால் இங்குள்ள மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்லி இந்த தேர்தலில் வாக்குகளை கேட்கிறோம். தி.மு.க. மக்கள் முன் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றி தரும். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

எதிர் அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாக கூறியுள்ளார். வாஜ்பாயும், கருணாநிதியும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூட்டணி வைத்தனர். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையை அனுமதிக்காமல் பா.ஜ.க.வுடனான கூட்டணியை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் கருணாநிதி.

ஆனால் தற்போது பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எதிர்த்து ஒரு வார்த்தையாவது கூறினாரா? ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை எதிர்த்து குரல் கொடுத்தார். பா.ஜ.க. எதை சொல்கிறதோ அதற்கு எடப்பாடி பழனி சாமி தலையாட்டி கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்புவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இனிமேல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் தேர்தல் வந்தவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார்.

தற்போது சிலிண்டர் கியாஸ் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காண பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு முறையும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வரிசையில் நின்றோம். பண மதிப்பிழப்பின் போதும் வரிசையில் நின்றோம். தற்போது பெட்ரோல், கியாஸ், சிலிண்டருக்காகவும் வரிசையில் நிற்கிறோம்.

பொதுமக்களை  வரிசையில் நிற்க வைத்த பா.ஜ.க. மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.