தமிழக செய்திகள்

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ முழக்கத்தை எழுப்பக் காரணம் தி.மு.க.தான் - திருமாவளவன்!

காங்கிரஸோடு கூட்டணி வைத்து பாஜகவுக்கு எரிச்சலூட்டும் நிலைப்பாட்டை எடுத்தவர் விஜய்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று தவெக கூட்டணி கட்சிகள் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதுராந்தகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டன. இக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது;

நியாயமான காரணம்

“திமுகவுடன் இணைந்து நெடுங்காலம் பயணித்திருக்கிறோம். எத்தனையோடு இடர்பாடு வந்தபோதும் அந்த அணி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

தவெகவோடு கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்றால், அதற்கான நியாயமான காரணங்களை மறுபடியும் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

கொள்கை முரண்பாடு இல்லை

எந்தச் சூழலிலும், தனிநபர், பதவி, அதிகாரம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி முடிவு எடுத்ததில்லை. நாம் உள்வாங்கிக் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்திதான் முடிவு எடுத்திருக்கிறோம். விசிக கொள்கைகளை தவெக முன்னிறுத்துகிறது. அதனால்தான் கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டியுள்ளார்.

தவெக மட்டும்தான் பெண் தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டுள்ளது. தவெகவுக்கும், விசிகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் கிடையாது.

ஸ்டாலின்தான் கூட்டணியை விட்டு வெளியேற சொன்னார்...

2011, 2014 தேர்தலில் திமுகவுடன் இருந்தேன். 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதற்கு நாங்கள் காரணம் இல்லை. அன்றைக்கு ரவிக்குமாரை அழைத்து, ‘நாங்கள் 180 முதல் 200 இடங்களில் தனித்து போட்டியிட இருக்கிறோம்.

நீங்கள் இந்தக் கூட்டணியில் தொடர வேண்டாம். எனவே நீங்கள் வேறு கூட்டணிக்கோ, வேறு வழிக்கோ போகலாம்’ என ஸ்டாலின் அழைத்துச் சொன்னார். அதன் காரணமாகவே நாங்கள் வெளியேறினோம்.

அதன்பின் வெளியே வந்து நான் எழுப்பிய முழுக்கம்தான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.

மக்களின் கட்டளை

2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் வெற்றிகள் கிடைத்தன. 2026ல் அந்த வெற்றி கிடைக்கவில்லை. விஜய் வெற்றியோ, தவெக ஆட்சி பிடித்ததோ நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், மக்கள் தேர்வு செய்துவிட்டார்கள்.

20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு புறமும், தவெக ஒரு புறமும் இருக்க, கூட்டணி இல்லாமல், ஓட்டுக்கு காசு தராமல், சாதி, மத வரம்புகளை கடந்து எல்லா அரசியலும் கடந்து 108 இடங்களை ஒரு கட்சிக்கு மக்கள் தந்திருக்கிறார்கள் என்றபோது, அது நமக்கு கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில், நாங்கள் யாரும் எதிர்பார்க்காத முடிவை தவெக தலைவர் விஜய் எடுக்கிறார். ஆதவ் அர்ஜூனா கூறியதுபோல, பாஜகவுக்கு எரிச்சலூட்டும் நிலைப்பாட்டை எடுத்து, திரைப்படங்களில் என் பெயர் விஜய், அரசியலில் என் பெயர் ஜோசப் விஜய் எனும் நிலைப்பாட்டை அறிவித்தார்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT