தமிழக செய்திகள்

TN Assembly Election| மேற்குமண்டலத்தை கைப்பற்ற தி.மு.க. வியூகம்: கோவையில் போட்டியிட செந்தில்பாலாஜி திட்டமா?

கடந்த சட்டசபை தேர்தலில் தனது சொந்த ஊரான கரூரில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி இந்த முறை கோவையில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

மாலை மலர்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஆளும் கட்சியான தி.மு.க. வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்ற கோஷத்துடன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வெற்றியை விட கொங்கு மண்டலத்தில் அதுவும் மண்டலத்தின் தலைநகரான கோவையின் வெற்றியை தான் தி.மு.க. தலைமை பெரிதாக எதிர்பார்த்துள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க.வால், அதன்பின்னர் நடந்த 5 தேர்தல்களிலும் பாதியளவு தொகுதிகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிலும் 2001, 2011, 2021 தேர்தல்களில் கோவையில் தி.மு.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ.க்கள் கூட கிடைக்கவில்லை.

இதற்கு அ.தி.மு.க.வை போன்று வலுவான தலைவர்கள் தி.மு.க.வுக்கு இல்லாததே காரணம் என கட்சியினர் தெரிவித்து வந்தனர்.

இதனால் 2021 சட்டசபை தேர்தல் முடிந்ததுமே, 2026 சட்டசபை தேர்தலில் மேற்கு மண்டலத்தை முழுவதுமாக கைப்பற்ற வியூகம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தார்.

அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் நடந்த உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.

2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்று கொடுப்பதுடன், மேற்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பது தான் செந்தில்பாலாஜியின் விருப்பம்.

இதற்காக அவர் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், சுற்றுப்பயணம் செய்து, அங்கு நிலவக்கூடிய உட்கட்சி பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வெற்றி ஒன்றே நமது தாரக மந்திரம், கட்சியின் வெற்றிக்கு உழையுங்கள் என அறிவுறுத்தினார்.

அத்துடன் அந்த தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதகமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து பணியாற்றி வருகிறார்.

மேற்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி காட்டுவோம் என்று சூளுரைத்துள்ள செந்தில்பாலாஜி, தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் தனது சொந்த ஊரான கரூரில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி இந்த முறை கோவையில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

செந்தில்பாலாஜி கோவையில் போட்டியிட வேண்டும் என்பது கட்சி தலைமையின் விருப்பமாக உள்ளது. அத்துடன் அவர் அங்கு போட்டியிட்டால், அது ஒட்டுமொத்தமாக மேற்கு மண்டலத்தையே தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க தலைமை கருதுகிறது.

இதுதொடர்பாக அண்மையில் நடந்த தி.மு.க. வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற செந்தில்பாலாஜியிடம், மேற்கு மண்டலத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

மேலும் செந்தில்பாலாஜி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்குள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என தி.மு.க தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் செந்தில்பாலாஜி, சொந்த ஊரான கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடுவாரா? என்பது தெரியவில்லை.

அப்படி கோவை மாவட்டத்தில் அவர் போட்டியிட்டால், கோவை தெற்கில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்க வாய்ப்பிருப்பதாக தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ராஜீவ்காந்தி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு. மீனா ஜெயக்குமார் உள்பட பலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி களமிறங்க போவதாக வரக்கூடிய தகவலானது கோவை தேர்தல் களத்தில் அனலை பற்ற வைத்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை கோவை தெற்கில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாற உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தொகுதி மாறும்பட்சத்தில், இங்கு ஏற்கனவே 2016-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான அம்மன் அர்ச்சுனனே மீண்டும் களமிறங்குவார் என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

இதன் மூலம் கோவை தெற்கில் ஒன்று செந்தில்பாலாஜி-அம்மன் அர்ச்சுனன் அல்லது செந்தில்பாலாஜி-வானதி சீனிவாசன் என்பது தான் போட்டியாக இருக்க போகிறது.

செந்தில்பாலாஜி கோவையில் போட்டியிடும் பட்சத்தில் கோவை மாவட்ட தேர்தல் களமானது செந்தில்பாலாஜியா? எஸ்.பி.வேலுமணியா? என்று மாறிவிடும். அத்துடன் அ.தி.மு.க.வுக்கு கடுமையான போட்டியாகவும் இது மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

செந்தில்பாலாஜியை பொறுத்தவரை கடந்த தேர்தலை போல அல்லாமல் இந்த தேர்தலில் கோவையிலும், கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால், இங்கிருந்து எல்லா தொகுதிகளையும் பார்த்து கொள்ள முடியும் என்பதும் ஒரு காரணமாக இருப்பதாகவும் தி.மு.க.வினர் சொல்கின்றனர்.

மேலும் கோவை அ.தி.மு.க. கோட்டையாகவும், எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு மிக்க இடமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு போட்டியிடுவதன் மூலம் அ.தி.மு.க.வின் அந்த செல்வாக்கையும் உடைத்து தி.மு.க. செல்வாக்கை நிலைநாட்டமுடியும் எனவும் அவர் கணக்கு போட்டு காய்நகர்த்தி வருகிறார்.

அத்துடன் பா.ஜ.க போட்டியிட்ட கோவை தெற்கை குறிவைத்திருப்பதன் மூலம் பா.ஜ.கவுக்கு செக் வைக்க தனது ஆட்டத்தை செந்தில்பாலாஜி இங்கிருந்து ஆரம்பித்து விட்டதாக கட்சியினர் சொல்கிறார்கள்.

செந்தில்பாலாஜி கோவையில் போட்டியிட போவதாக வரும் தகவலை அடுத்து அ.தி.மு.க.வும் அதனை எதிர்கொள்ள தயாராகி விட்டது.

கடந்த முறையை போன்று 10-க்கு 10 பெற்று விட வேண்டும் என்பதில் அ.தி.மு.கவும் உறுதியாக இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணியும் களத்தில் இறங்கி தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.