

கரூர் கூட்ட நெரிசலில் 410 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி விட்டு சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் நடந்த துயர சம்பவங்கள் குறித்து சில கேள்விகளை சி.பி.ஐ. முன் வைத்தது, அந்தக் கேள்விகளுக்கு முறையான பதில்களை வழங்கி உள்ளேன்.
குறிப்பாக சாட்சியின் அடிப்படையில் அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கான பதிலாக நான் கூறியதை பொது வெளியில் சொன்னால் அது சரியாக இருக்காது.
முறையான கேள்விகளுக்கு முறையான பதில்களை வழங்கி உள்ளேன். காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது.
சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தி இருக்கலாம், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அன்று களத்தில் இருந்தவர்கள் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்கி உள்ளேன். மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவது குறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை.
தி.மு.க.வினரை பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டோம். இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, இறுதியாக திருச்சியில் மாநில அளவில் 10 லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாடு என தொடர்ச்சியாக தேர்தல் பணிகளில் வேகமாகசென்று கொண்டிருக்கிறோம்.
எனவே மற்றவர்களின் கருத்துகள் பற்றி நாங்கள் ஆலோசிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. களத்தில் மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் என்பது 2-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கான சூழல் அமைந்துள்ளது.
மக்களை சந்திக்க கூடிய பணிகளை சிறப்பாக நாங்கள் முன்னெடுத்து உள்ளோம். தேர்தலை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.