பிரபல நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முக்கியப் பிரமுகருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், சமீபத்தில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்றக் கூட்டத்தில், ரசிகர் மன்றங்கள் இனி நற்பணி இயக்கமாகச் செயல்படும் என்றும், அதற்கான புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குச் சேவையாற்ற யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து இணைத்துக் கொள்ளும் பரந்த பக்குவம் கொண்டவர். இயக்கத்தின் வளர்ச்சிக்குத் பங்களிப்பவர்களாக இருப்பாரேயானால், அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்வார். இளைஞர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அப்படிப்பட்ட பிரபல நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்துத் தனது தனிப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். ஆனால், அரசியலுக்கு முழுமையாக வந்த பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது சரியாக இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்காலத்தில் சில நடிகர்கள் ஒரே நேரத்தில் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் விமர்சித்தார். மேலும், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், அதற்கான காலம்தான் பதில் சொல்லும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.