தமிழக அமைச்சரவையில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

அரசியலில் இதற்கு முன்னரும் ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்குத் தலைவர்களும் தொண்டர்களும் மாறி வந்துள்ளனர்.
Minister Sengottaiyan-Chief Minister Vijay
Published on: 
Summary

"தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்துகளும் வெளிப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தினார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரு தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற்றது. இதன் காரணமாகத் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர்,"தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்துகளும் வெளிப்படுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் அமைச்சரவை மாற்றம் குறித்த பரவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் சிலர் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் நான் சொன்னேனே தவிர, 15 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று நான் கூறவில்லை. அரசியலில் இதற்கு முன்னரும் ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்குத் தலைவர்களும் தொண்டர்களும் மாறி வந்துள்ளனர். எனவே, இது எந்தவிதமான குதிரை பேரத்திற்கும் வழிவகுக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அரிசி தட்டுப்பாடு

பொதுமக்களுக்குத் தடையின்றி நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரிசி உற்பத்தி குறைவாக இருக்கும் காலகட்டங்களில் இதுபோன்று தற்காலிகத் தட்டுப்பாடுகள் ஏற்படுவது வழக்கம் என்றார். இதனைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக 2,000-க்கும் மேற்பட்ட அங்காடிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சந்தையில் விலைவாசி கணிசமாகக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தட்டுப்பாட்டைப் போக்க அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதல் அரிசியைக் கொள்முதல் செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கடந்த மூன்று மாத காலமாக இதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com