கோயம்புத்தூர் அருகே உள்ள பழமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஞ்சூர்பதி கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 40 பழங்குடியின மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் சிலர் கழிப்பறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வைரலாக பரவி வருகிறது.
பள்ளிக்கு தூய்மைபணியாளர்கள் சரியாக வருவதில்லை என்ற காரணத்தை கூறி, தலைமையாசிரியை மாணவிகளை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் மீது மேலும் பல தீவிர புகார்களைப் பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் முன்வைத்துள்ளனர்.
வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி ஒரு மாணவியை தலைமையாசிரியை பிரம்பால் கடுமையாகத் தாக்கியதில், அந்த சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளியின் குடிநீர்த் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்படாமல், அதில் தவளைகள் மிதப்பதாகப் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சேதமாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு சரியான உணவும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு குழந்தை நலக் குழு (CWC) உறுப்பினர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி, விரிவான அறிக்கையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு சமர்ப்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின சிறுவர்கள் பயிலும் அரசுப் பள்ளியில் நடைபெற்றுள்ள இந்த மனித உரி மீறல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.