தமிழக செய்திகள்

புள்ளி வைத்த இன்டர்போல்.. டாஸ்மாக் ஊழல் வழக்கில் ரத்தீஷ்க்கு ரெட் கார்னர் நோட்டீஸ்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ள டி.ஆர். ரத்தீஷ்க்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மதுபான கொள்முதல், மது ஆலை அனுமதி, பார் உரிமம் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

நோட்டீஸ்

இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் ரத்தீஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால், ஏற்கனவே அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இன்டர்போல் என்பது சர்வதேச காவல் வலையமைப்பாகும்.

ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நபரைக் கண்டுபிடித்துத் தற்காலிகமாகக் கைது செய்யுமாறு, உலக நாடுகளின் காவல்துறைக்கு இன்டர்போல் அமைப்பு விடுக்கும் அறிவிப்பாகும்.

ரத்தீஷ்

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரத்தீஷ் டாஸ்மாக் ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அரசுப் பதவியோ அல்லது அரசியல் பதவியோ இல்லாத போதிலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் இவர் ஆதிக்கம் செலுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன.

இவர் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவர் என விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உடன் இவர் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல்கள் சோதனையில் சிக்கியதாக அமலாக்கத்துறை முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT