நீலாங்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கழிவுகள் லாரிகளில் ஏற்றி சென்றனர். அங்கிருந்து சுமார் 100 டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வீதிகளிலும் வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. 4 இடங்களிலும் 2,054 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக கரைக்கப்பட்டன.
இந்த பணியினை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
கிரேன்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை நகரத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஊர்வலமாக சிலைகளை கொண்டு செல்லும் போது வழிநெடுக மலர்களை தூவி சென்றனர். இதே போல கடற்கரைப் பகுதியிலும் ஆங்காங்கே வீசப்பட்ட மாலைகள், மலர்கள் கிடந்தன. தாம்பரம், ஆவடி போலீஸ் எல்லை பகுதிக்கு உட்பட்ட இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன.
இவற்றையெல்லாம் உடனுக்குடன் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து அகற்றினர். நேற்று காலையில் இருந்து இரவு வரை கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரை ஒதுங்க தொடங்கின.
பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒதுங்கிய கழிவுகளை தூய்மைப் பணி யாளர்கள் நேற்று மாலை முதல் அப்புறப்படுத்த தொடங்கினர்.
நேற்று இரவு வரை 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. மரக்கட்டைகள், சிலைகளுக்குள் வைக்கப்பட்ட சில பொருட்கள் பிளாஸ்டிக் மாலைகள் கரையோரம் வந்து ஒதுங்கின. நள்ளிரவிலும் கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. தூய்மை பணியாளர்கள் விடிய விடிய கழிவுகளை அகற்றினர்.
இன்று காலையிலும் கடற்கரையில் ஒதுங்கிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் 120 டன் கழிவுகள் 2 நாட்களில் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
இதே போல நீலாங்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கழிவுகள் லாரிகளில் ஏற்றி சென்றனர். அங்கிருந்து சுமார் 100 டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கட்டைகள், இரும்பு கம்பிகள், அலங்காரப் பொருட்கள் ஒதுங்கியதை காலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
காசிமேடு பகுதியில் 20 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரிகள் கூறும்போது, விநாயகர் சிலை கரைப்பு மூலம் கரை ஒதுங்கிய கழிவுகளை நேற்று முதல் அப்புறப்படுத்தி வருகிறோம். நாளை வரை இந்த பணி நடைபெறும்.
ஒரு சில பொருட்கள் உடனடியாக கரை ஒதுங்கி விடும். சில பொருட்கள் 2 நாட்கள் கழித்து ஒதுங்கும். அதனால் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி நாளை வரை நடைபெறும். இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சிலை கரைப்பு மூலம் எடுக்கப்பட்ட மக்காத கழிவுகள் அனைத்தும் லாரிகள் மூலம் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்றனர்.