தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் மற்றும் சிறிய சிலைகள் என 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
ஒவ்வொரு நாளும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. இதுபோன்று பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை நேற்றும், இன்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.
இதன்படி சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் நேற்று முதல் கரைக்கப்பட்டன.
சென்னையில் நேற்று சுமார் 200 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தாம்பரம், ஆவடி, சென்னை மாநகர பகுதிகளில் இருந்து இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப்பட் டன.
சென்னை மாநகரில் 1,562 விநாயகர் சிலைகளும், தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதியில் 636 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 761 சிலைகளும் நிறுவப்பட்டிருந்த நிலையில் நேற்று கரைத்தது போக மீதமுள்ள அத்தனை சிலைகளும் இன்று கடலில் கரைக்கப்பட்டது.
இதையொட்டி பிரமாண்ட ஊர்வலமும் நடைபெற்றது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு போலீசார் வழிதடங்களையும் அறிவித்து இருந்தனர்.
இப்படி போலீஸ் தரப்பில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று விழா குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி சென்னையில் இன்று 1500-க்கும் அதிகமான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் போன்ற கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது.
தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதிக்கு உட் பட்ட புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 600 -க்கும் மேற்பட்ட சிலைகளும், ஆவடி பகுதியில் நிறுவப்பட்டிருந்த 700 -க்கும் மேற்பட்ட சிலைகளும் பாலவாக்கம் மற்றும் கோவளம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது.
இதேபோன்று ஆவடி கமிஷனர் அலுவலக எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் பழவேற்காடு, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 இடங்களில் கரைக்கப்பட்டன.
இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 9 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் 16,500 போலீசாரும், ஆவடி பகுதியில் 1,500 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 1,300 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன்கள் வரவழைக்கப்பட்டு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். சிலைகளை கடலுக்குள் எடுத்து செல்வதற்காக கடற்கரை மணல் பரப்பில் டிராலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
அதில் சிலைகளை கிரேன் மூலம் தூக்கி வைத்து கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் விநாயகர் சிலைகளை விழா ஏற்பாட்டாளர்கள் கரைத்தனர்.
போலீஸ் கமிஷனர்கள் அமல்ராஜ் (சென்னை), பிரேமானந்த் சின்ஹா (தாம்பரம்), செந்தில் குமார் (ஆவடி) ஆகியோரது மேற் பார்வையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு ஆகியவற்றை கூடுதல் கமிஷனர்கள், இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர்.
அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சென்னை மெரினா கடற்கரையில் குதிரை படைகள் மூலமாகவும், கடற்கரை மணலில் செல்லும் ரோந்து வாகனத்திலும் போலீசார் கண்காணித்தார்கள்.
பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் சிலைகளை கரைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
துணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விநாயகர் ஊர்வலத்திலும் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடைவிதிக் கப்பட்டு இருந்தது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் மாற்று மதத்தினரை அவமதிக்கும் வகையில் எந்தவித கோஷங்களையும் எழுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை போலீசார் முழு மையாக கண்காணித்து தேவையில்லாத வகையில் கோஷம் எழுப்பியவர்களை கண்டித்தனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.