சென்னை:
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்கிறது.
கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 4 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று முதல் 22-ந்தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக் கூடும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 முதல் 25 செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேகமூட்டமும் வெயிலும் மாறி மாறி நிலவியது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் பரவலாக பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்துள்ளது.