கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் உள்ள தவெக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளரா அல்லது முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்பதுதான் அந்த வாதம்.
தவெக எம்.எல்.ஏக்கள் பலரும் விஜய் பிரதமர் ஆவார் எனக்கூறிவரும் நிலையில், அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே இருப்பதாக காங்கிரஸார் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரும், எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வேண்டுமானால் விஜய் பிரதமர் ஆகலாம் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,
“விஜய் தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையை பெறவில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியே அமைத்துள்ளார். அப்படியிருக்க, அவரால் எப்படிப் பிரதமராக முடியும்?
ஒருகாலத்தில் தமிழ்நாட்டை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்தோம். அப்படி விஜய் வேண்டுமானால் தமிழ்நாட்டை தனி நாடாக்கினால் பிரதமர் ஆகலாம்.
ஒரு மாநிலத்திலேயே அவரால் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்திவருகிறார். அதிலும் காங்கிரஸ் ஆதரவோடு; 5 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராகுல் காந்தி பிரதமர் ஆகவேண்டும் என இருக்கிறார்கள்.
நாளையே அவர்கள் ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்றுக்கூறினால், இந்த ஆட்சியே கவிழ்ந்துவிடும். பின் மற்ற மாநிலங்களில் எப்படி வெல்லமுடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.